தவெகவிற்கு வரும் கூட்டமும்…பாஜக-வுக்கு வரும் கூட்டமும் ஒன்று அல்ல – தமிழிசை..!

Estimated read time 1 min read

மயிலாப்பூர் சட்டமன்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 23 உயிர்கள் பலியாகியுள்ளன. பட்டாசு தொழிற்சாலை நிறைந்த இடத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை தேவை என்று பலமுறை கூறினேன். ஆனால், இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதியைகூட அவர்கள் மேம்படுத்தவில்லை. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை இவர்கள் எதிர்த்தது மன்னிக்க முடியாது குற்றம். பிரதமர் கூறியது போல் அவர்கள் சுயநல அரசியலுக்காக பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரத்தை மறுத்துவிட்டார்கள்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு எதிரானவர் என்பது இதன் மூலம் தெரிகிறது. பெண்கள் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள். முதலமைச்சர் அலை வீசி வருவதாக சொல்கிறார்கள், ஆனால், திமுக கூட்டணியில் உள்ளவர்கள் பதற்றத்துடன் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என்று வருமான வரித்துறை கூறுகிறது. அதுவே பொய்யான தகவல். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கிறார். ஒரு முதலமைச்சர் இது போன்ற செய்தி உண்மையா? இல்லையா? என்று தெரிந்து கொள்ளாமல் அதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது வேடிக்கையாக உள்ளது.

மக்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சியை நடத்திக் கொண்டு, நல்லாட்சி என்கிற முகத்திரையை நீங்கள் போட்டுள்ளீர்கள். போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. ராகுல் காந்தி தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பது போன்று பேசுகிறார். இலங்கையில் தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, இவர்களது ஆட்சியில் தான். வராத வருமானத் துறை ரைடு வந்து விட்டதாக சிறுபிள்ளைத்தனமான அரசியலை செல்வப் பெருந்தகை மேற்கொள்கிறார் .

சென்னையை தேசிய ஜனநாயக கூட்டணியின் கோட்டையாக மாற்றுவோம். எங்கள் கூட்டணியை பார்த்து பல்வேறு விமர்சனங்களை அவர்கள் வைப்பதை பார்த்தால், அதிகம் பயத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், வேடிக்கை பார்க்க கூடாது.

தமிழக வெற்றி கழகத்திற்கு வரும் கூட்டமும், பாஜக-வுக்கு வரும் கூட்டமும் ஒன்று அல்ல. பாஜக-வுக்கு வருகிற கூட்டம், கட்சி கொள்கைக்கானது. தேர்தல் அனுபவம் விஜய்க்கு இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்த திட்டமிடாதவர்களால், ஆட்சி எப்படி நடத்த முடியும். எனவே விஜய்-க்கு வாக்களிப்பதற்கு முன்னர் பலமுறை சிந்தித்து வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி பேசும்போது, செல்வப் பெருந்தகை தவறாக மொழி பெயர்த்தது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “மும்மொழி கற்றுக் கொண்டால் மூழ்கடித்துவிடும் என்று கூறினார்கள். நீங்கள் இருமொழிக் கொள்கையாவது சரியா படித்தீர்களா? என செல்வப் பெருந்தகையை விமர்சனம் செய்தார்.

மேலும், “தேர்தல் என்பது பணநாயகம் இல்லாமல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். வாக்காளர்கள் வாக்களிக்கும் முன் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author