படப்பிடிப்பில் பயங்கர விபத்து..! நடிகை ராஷ்மிகா மந்தனா படுகாயம்…

Estimated read time 0 min read

இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், பான் இந்தியா நாயகியான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இப்படத்தில் ஒரு போர் வீராங்கனை போன்ற அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கோண்டு இனப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படம் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில், ஆபத்தான சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடிக் காட்சிகளை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, ஒரு பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே தவறி விழுந்ததில், அவரது இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடனடியாகக் காயமடைந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு முழுமையாக குணமடைய குறைந்தது 6 வாரங்கள் வரை கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதனால், தற்போது ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு, இந்த விபத்து அவரது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் பூரண நலம் பெற்று விரைவில் மீண்டும் படப்பிடிப்புக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author