நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், வினாத்தாள் கசிவு தொடர்பான புதிய சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், தேர்வு நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பே (ஜூன் 20) அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தேர்வு எழுதவிருந்த மாணவர் ஒருவருக்கு வீடியோ கால் மூலம் நீட் வினாத்தாள் போன்ற ஒன்றை காட்டியதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும், அந்த வினாத்தாளை முழுமையாகத் தருவதற்கு அந்த நபர் ரூ. 30,000 பணம் கேட்டு மிரட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் அஜ்மீர் காவல்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, ஏபிவிபி (ABVP) அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ண சிங் தாக்கூர் என்பவர் காவல்துறையில் முறைப்படி புகார் அளித்துள்ளார். முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் ஒருவருக்கு வந்த மர்ம அழைப்பைத் தொடர்ந்து, அதே எண்ணில் இருந்து கிருஷ்ண சிங்கிடமும் பேரம் பேசப்பட்டுள்ளது. வினாத்தாளைப் பெற ரூ. 30,000 அனுப்புமாறு கூறி, பணப் பரிவர்த்தனைக்காக ஒரு யுபிஐ (UPI) எண்ணையும் அந்த மர்ம நபர் பகிர்ந்துள்ளார்.
இதைக் சாமர்த்தியமாகப் பதிவு செய்த கிருஷ்ண சிங், அந்த ஆடியோ ஆதாரத்தை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். முன்னதாக கடந்த மே 3 அன்று நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு புகாரால் ரத்து செய்யப்பட்டு, இன்று மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
