
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா விஜயகாந்த் வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன். நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் தெலுங்கானா ஆளுநர் ஆனவுடன் தெலுங்கானா ராஜ்பவன் முற்றிலும் நெகிழி இல்லாத ராஜ்பவனாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலேயே மாற்றினேன்.
அப்பொழுது கண்ணாடி குப்பிகளை வாங்கி, வரும் விருந்தினர்களுக்கெல்லாம் அதை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினோம். அந்தக் கண்ணாடி குப்பிகளின் மாதிரி படத்தை இங்கே பதிவிடுகிறேன். சட்டமன்றத்திலும் இதைப் பின்பற்றலாம். சிறிய குப்பிகள்தான் அதனால் வீசினாலும் காயப்படாமல் இருக்கின்ற அளவிலேயே இவை இருக்கின்றன” என அதில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவையில் இன்று காலை பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பணியாளர்கள் தண்ணீர் எடுத்துவந்து தருவது தொடர்பாக தனது கருத்தை முன்வைத்தார். அப்போது பேசிய பிரேமலதா, “சட்டப்பேரவையில் குடிநீர் வசதி மேம்படுத்தப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுக்கிறார்கள். அது மிகவும் பழைய மாடலாக இருக்கிறது. எனவே, அவையில் நெகிழி அல்லாத கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், “ஏன்… கோபம் வந்தால் பாட்டிலை தூக்கி வீசவா?” என நகைச்சுவையாக கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரேமலதா, “பாட்டில்தான் வீச வேண்டும் என்ற அவசியமில்லை; தண்ணீர் டம்ளரையும் தூக்கி வீசலாம். தண்ணீர் பாட்டில்களை வைப்பதால் அரசுக்கு பெரிய செலவு ஏற்படாது” என்றார்.
ஓபிஎஸ் கருத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தனிப்பட்ட அனுபவங்களையோ சொந்தப் பிரச்சனைகளையோ அவையில் பேசக் கூடாது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதில் இருந்து ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே வார்த்தை மோதல் நிலவி வந்த நிலையில், அவை அனைத்தையும் தண்ணீர் ஊற்றி அணைக்கும் விதமாக இந்த ‘தண்ணீர் பாட்டில்’ விவகாரம் மாற்றியது.
இன்று சட்டமன்றத்தில் தண்ணீர் கொடுப்பதை பற்றிய ஒரு கோரிக்கையை சகோதரி பிரேமலதா @PremallathaDmdk வைக்கவும் அதற்கு பதிலான சில விவாதங்கள் நடந்ததையும் தொலைக்காட்சியில் பார்த்தேன்… நெகிழி பாட்டிலில் தண்ணீர் வைக்க வேண்டாம் என்பதற்காக சட்டமன்றத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருக்கிறது என்று… pic.twitter.com/ghMn3A4roA
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) June 22, 2026
