தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை நடத்தினார்.
சென்னையின் 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
அதனையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் ஆலோசனை நடத்தினார். ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை, வாக்கு எண்ணிக்கை முகவர்களின் படிவங்களை பரிசீலித்து அனுமதி வழங்குவது சட்டத்தில் இல்லை என எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதை தேர்தல் அலுவலர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
மேலும், மூன்று அடுக்கு பாதுகாப்பு அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நான்கு அடுக்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பூத் முகவர்களை காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தும் தேர்தல் ஆணைய முடிவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
