பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமராகும் பந்தயத்தில் ஆண்டி பர்ன்ஹாம் முதலிடத்தில் உள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இடைத்தேர்தலில் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்டு 54 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் மீதான எதிர்பார்ப்பு உலகளவில் அதிகரித்துள்ளது. பிரபல ஆங்கிலத் தொடரான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ கதையில் வரும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிடப்பட்டு, பிரிட்டன் மக்களால் ‘வடக்கின் மன்னர்’ என்று அன்போடு அழைக்கப்படும் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியின் மேயராகப் பதவி வகித்து, அங்கு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்திப் பெரும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிவர்பூல் நகரில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆண்டி பர்ன்ஹாம், டோனி பிளேயர் மற்றும் கார்டன் பிரவுன் ஆகியோரின் அமைச்சரவையில் கலாச்சாரம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர். பிரிட்டன் அரசியலின் அதிகார மையத்தை லண்டனில் இருந்து மாற்றி, அனைத்துப் பகுதி மக்களுக்கும் சமமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இவர், தற்போது தீவிரமாக வளர்ந்து வரும் வலதுசாரி கட்சிகளின் சவால்களை முறியடிக்க லேபர் கட்சிக்குக் கிடைத்த மிகச்சிறந்த தலைவராகப் பார்க்கப்படுகிறார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உட்கட்சித் தேர்தல்கள் மூலம் ஆண்டி பர்ன்ஹாம் பிரிட்டனின் 7-வது பிரதமராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
