டெல்லி : இந்தியாவின் இருசக்கர வாகனச் சந்தை தற்போது மிக வேகமாக மின்சார மயமாகி வருகிறது. முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது அதிநவீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்தியச் சாலைகளில் இறக்கத் தயாராகி வருகின்றன. நீங்கள் வரும் நாட்களில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கத் திட்டமிட்டிருந்தால், இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த 3 மாடல்கள் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த சாய்ஸாக இருக்கும்.
குடும்பங்களுக்கான பட்ஜெட் ஸ்கூட்டர்கள் முதல் இளைஞர்களைக் கவரும் அதிவேக ஸ்போர்ட்டி ஸ்கூட்டர்கள் வரை விரைவில் களம் காணவிருக்கும் அந்த டாப் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.
ஏத்தர் கோனார்க் (Ather Konarc)
இந்தியாவின் முன்னணி இவி நிறுவனமான ஏத்தர், முற்றிலும் புதிய “EL” பிளாட்ஃபார்ம் அடிப்படையில் இந்த ஏத்தர் கோனார்க் ஸ்கூட்டரை உருவாக்கி வருகிறது. உயர்தரமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மிகக் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முக்கிய சிறப்பம்சங்கள்: குடும்பத்தினர் அனைவரும் சவுகரியமாக அமர்ந்து செல்லும் வகையில் நீளமான மற்றும் அகலமான பிளாட் சீட் (Flat Seat) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. கனமான மளிகைப் பொருட்களை எளிதாக எடுத்துச் செல்லவும், வண்டியின் ஸ்திரத்தன்மைக்காக பலமான சேசிஸ் அமைப்பும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் மற்றும் விலை: இந்த ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாகச் சார்ஜ் செய்தால் தோராயமாக 100 கி.மீ முதல் 140 கி.மீ வரை மைலேஜை வழங்கும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 1,00,000 என்ற பட்ஜெட்டில் இருந்து இந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் எனர்ஜி ஃபேமிலி ஸ்கூட்டர் (Simple Energy Family Scooter)
ஸ்போர்ட்டி ரக ஸ்கூட்டரான ‘சிம்பிள் ஒன்’ மாடலின் வெற்றியைத் தொடர்ந்து, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தினசரி அதிக தூரம் பயணிக்கும் குடும்பங்களுக்காக இந்த புதிய மாடலைக் கொண்டு வருகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள்: இந்த செக்மென்ட்டிலேயே இல்லாத அளவுக்கு இரண்டு முழு அளவிலான ஹெல்மெட்டுகளை வைக்கும் படியான மிகப்பெரிய அண்டர்-சீட் பூட் ஸ்பேஸ் (டிவிகி பாக்ஸ்) இதில் கொடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஓட்டுநருக்குக் கூடுதல் லெக்ரூம் (Legroom) வசதி கிடைக்க ஏதுவாக இதன் வீல்பேஸ் நீளமாக அமைக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் மற்றும் விலை: நகரப் பயன்பாடுகளில் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் தோராயமாக 100 கி.மீ முதல் 120 கி.மீ வரை மைலேஜ் தரும். இதன் விலை தோராயமாக ரூ. 1,30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டு, செப்டம்பர் மாத தொடக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா கியூசி3 (Honda QC3)
இந்தியாவின் நம்பர் 1 ஸ்கூட்டர் நிறுவனமான ஹோண்டா, இந்த மாடல் மூலம் இந்திய எலக்ட்ரிக் சந்தையில் மிக பிரம்மாண்டமாக தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. ஹோண்டாவின் அசைக்க முடியாத சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் தரம் இதற்குப் பெரிய பலமாகும்.
முக்கிய சிறப்பம்சங்கள்: இதில் மிக முக்கியமாக ‘ஹோண்டா மொபைல் பவர் பேக்’ எனப்படும் ஸ்வாப்பபிள் பேட்டரி (Swappable Battery) தொழில்நுட்பம் இடம்பெற வாய்ப்புள்ளது. அதாவது பேட்டரியைக் கழற்றி மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இந்தியச் சாலைகளின் குண்டும்குழிகளைத் தாங்க பலமான ஸ்டீல் பிரேம் மற்றும் ஹெவி-டியூட்டி சஸ்பென்ஷன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் மற்றும் விலை: இது ஒருமுறை சார்ஜ் செய்தால் தோராயமாக 110 கி.மீ வரை நம்பகமான மைலேஜை அள்ளித் தரும். இதன் விலை தோராயமாக ரூ. 1,20,000 ஆக இருக்கும் என்றும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு எது பெஸ்ட்?
குறைந்த முதலீட்டில் தினசரிப் பயன்பாட்டிற்கு ஒரு தரமான குடும்ப வாகனம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆகஸ்ட் இறுதியில் வரவிருக்கும் ஏத்தர் கோனார்க் மாடலுக்காகக் காத்திருக்கலாம். அதிக இடவசதி மற்றும் லக்கேஜ் வைக்கும் வசதிக்கு முக்கியத்துவம் தருபவர்களுக்குச் செப்டம்பரில் வெளியாகும் சிம்பிள் எனர்ஜி ஃபேமிலி ஸ்கூட்டர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
அதே நேரத்தில், எலக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட கால உழைப்பு, சிறப்பான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பை எதிர்பார்ப்பவர்கள் டிசம்பரில் களம் காணும் ஹோண்டா QC3 மாடலைத் தேர்ந்தெடுக்கலாம்.
