ஆந்திராவில் 800 பேர் அவசர அவசரமாக வெளியேற்றம்!

Estimated read time 1 min read

ஆந்திரப் பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா (Konaseema) மாவட்டத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி (ONGC) எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு கசிவு காரணமாக, அப்பகுதியைச் சுற்றியுள்ள 1 கி.மீ சுற்றளவில் வசித்த சுமார் 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மமிடிகுடுரு (Mamidikuduru) மண்டலத்திற்கு உட்பட்ட கெட்டடா (Geddada) கிராமம் அருகே இந்த எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இம்மாவட்டத்தில் பதிவாகும் நான்காவது ஓ.என்.ஜி.சி எரிவாயு கசிவு சம்பவம் இதுவாகும்.

ஆந்திர முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ரசோல் (Rajole) தொகுதிக்கு உட்பட்ட நகரம் கிராம எல்லையில் உள்ள தாடிவாரிமெரகா (Tadivarimeraka) பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எண்ணெய் கிணற்றிலிருந்து பலத்த சத்தத்துடன் திடீரென எரிவாயு பீறிட்டு வானத்தை நோக்கி அதிக அளவில் வெளியேறியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள கெட்டடா – மமிடிகுடுரு நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தைக் காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். மேலும், விபத்து நடந்த பகுதியை அதிகாரிகள் சுற்றி வளைத்து, எரிவாயு பரவுவதைத் தடுக்கத் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் (Water blanket) பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தற்போது அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் முகாமிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர்; ஓரிரு மணி நேரத்தில் தெளிவான நிலவரம் தெரியவரும்” என ஓ.என்.ஜி.சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அப்பகுதி மக்கள் மின்சாதனப் பொருட்கள், மின்விளக்குகள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் மகேஷ் குமார் ரவிராலா அறிவுறுத்தியுள்ளார். “எரிவாயு கசிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 1 கி.மீ சுற்றளவில் இருந்த சுமார் 400 முதல் 500 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் களத்தில் உள்ளனர்; மாலைக்குள் கசிவு முழுமையாக அடைக்கப்படும்” என்று அவர் கூறினார். மேலும், எரிவாயு பக்கவாட்டில் பரவாமல் செங்குத்தாக மேல்நோக்கிச் செல்வதால் தற்போது பெரிய அளவில் அச்சுறுத்தல் இல்லை என்றும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளை உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பே மிக முக்கியம் என வலியுறுத்தியுள்ள அவர், எரிவாயு கசிவைக் கட்டுப்படுத்தச் சிறப்புத் தொழில்நுட்பக் குழுக்களை உடனடியாகக் களமிறக்குமாறு ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக இப்பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது குறித்துக் கவலை தெரிவித்த முதலமைச்சர், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர் நிர்வாகிகளுடன் நேரடியாகப் பேசி, தற்போதைய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்துமாறு மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் மோரி (Mori) கிராமத்தில் உள்ள எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட கட்டுப்பாடற்ற கசிவால் சுமார் ஐந்து நாட்கள் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author