வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது.
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழைய கொடிமரம் பழுதடைந்த நிலையில், புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, சுமார் 25 லட்சம் ரூபாய் நிதி திரட்டிய பார்வதிபுரம் கிராம மக்கள், கடந்த எட்டு மாதங்களாக புதிய கொடிமரத்தை தயாரித்தனர். அதன்படி, காலை அகவல் பாராயணம் பாடி, 39 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் சத்திய ஞான சபை வளாகத்தில் முறைப்படி நிறுவப்பட்டது.

அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள், “அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை…” என முழக்கமிட்டு புதிய கொடிமரத்தை வரவேற்றனர்.
கொடிமரத்தில் பீடம் மற்றும் செப்புத் தகடுகள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது என்றும், அக்டோபர் 5-ஆம் தேதி பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து சன்மார்க்கக் கொடியை ஏற்ற உள்ளனர் எனவும் சன்மார்க்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
