அதிபர் ட்ரம்புக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த கனடா..!

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் கனடாவுக்கும் இடையே நீடித்து வரும் கருத்து மோதல் தற்போது தெருவின் பெயர் மாற்றம் வரை சென்றுள்ளது. கனடா தலைநகர் ஒட்டாவாவில் சுமார் 25 ஆண்டுகளாக டிரம்ப்பின் பெயரில் அழைக்கப்பட்டு வந்த குடியிருப்புத் தெருவின் பெயரை மாற்ற நகர சபை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அந்தத் தெருவுக்கு ‘டாக்கோ அவென்யூ’ என்ற புதிய பெயரை சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் மாற்றத்துக்கு பின்னால் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘அமெரிக்க ஏரி’ என மாற்றுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். கனடா தொடர்பாக கடுமையான கருத்துகளையும் அவர் தெரிவித்திருந்த நிலையில், இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பு அந்நாட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே டிரம்ப்பின் பெயரில் இருந்த தெருவின் பெயரை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

தெருவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ‘டாக்கோ’ என்ற பெயரும் அரசியல் பின்னணி கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அரசியல் மற்றும் வால் ஸ்ட்ரீட் வட்டாரங்களில் டிரம்ப்பை விமர்சிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் ஒரு சுருக்கமான சொல்லாக ‘டாக்கோ’ குறிப்பிடப்படுகிறது. டிரம்ப் தனது கொள்கைகளில் அடிக்கடி மாற்றங்களைச் செய்வதாக விமர்சிப்பதற்காக இந்தச் சொல் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, டிரம்ப்புக்கு பிடிக்காத முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பெயரில் மற்றொரு தெருவுக்கு பெயர் சூட்டுவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

ஒட்டாவாவில் டிரம்ப்பின் பெயரில் இருந்த இந்தத் தெரு, அவரது பெயரில் அமைந்துள்ள ஒரே தெருவாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டில் பெயரை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், குடியிருப்பாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அது கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் பெயர் மாற்ற நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. அக்டோபரில் நடைபெற உள்ள தேர்தலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்கா-கனடா இடையேயான அரசியல் மோதல், பெயர் மாற்ற விவகாரத்திலும் எதிரொலித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author