டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது செய்தி சேகரித்த பெண் பத்திரிகையாளர்கள் மீது டெல்லி காவல்துறை தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு கோரியும், சுயேச்சை விசாரணைக் குழு அமைக்கக் கோரியும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாமாலா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில் கைபேசி வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் தம்மை ஒரு சுயேச்சை அல்லது பகுதிநேர பத்திரிகையாளர் என்று கூறிக்கொள்கிறார்கள்.
இதில் யார் உண்மையான பத்திரிகையாளர், யார் வெறும் ரீல்ஸ் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி பணம் சம்பாதிப்பவர் என்றே கண்டறிய முடிவதில்லை” என்று குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், காவல்துறையினர் தங்களுக்கு எதிரான வழக்குகளைத் தாங்களே விசாரித்துக் கொள்ள முடியாது என்பதால் நடுநிலையான குழு தேவை என வலியுறுத்தினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், “நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள அனைவரும் தங்களைப் பத்திரிகையாளர் என்று அறிவித்துக் கொள்ளத் தொடங்கினால், அது சமூகத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சனைகளையே உருவாக்கும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி ஜாமாலா பாக்சி, “கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் ஒரு பத்திரிகையாளராக மாற்றிவிடுமா என்பதை நாம் விரிவாக ஆராய வேண்டும். அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவன ஊழியர்கள், சுயாதீனப் பத்திரிகையாளர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் அல்லது ரீல்ஸ் தயாரிப்பாளர்கள் எனப் பல பிரிவினர் உள்ளனர்.
இதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கூடுதல் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து விரிவான பரிசீலனை தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார். விசாரணையின் முடிவில், பெண் பத்திரிகையாளர்கள் மீதான துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், புகார் அளித்த பெண் பத்திரிகையாளரைக் கைது செய்யவோ அல்லது அவர் மீது கடுமையான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவோ கூடாது என டெல்லி காவல்துறைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
