அமெரிக்கா H-1B மற்றும் பிற விசா கட்டணங்களின் உயர்வு வரும் ஏப்ரல் 1 ( திங்கள்கிழமை ) ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அமெரிக்கா H-1B மற்றும் பிற விசா கட்டணங்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. தற்போது 460 அமெரிக்க டாலர்களாக இருக்கும் விசா கட்டணம் 780 டாலர்களாக அதிகரிக்கப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு மட்டுமல்ல, அடுத்த ஆண்டு முதல் H-1B விசாவுக்கான பதிவுக் கட்டணம் 10 அமெரிக்க டாலர் என்பதில் இருந்து 215 அமெரிக்க டாலராக உயர்த்தப்படும்.
அதேபோல, புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாவான L-1 விசாக்களுக்கான கட்டணம் 460 ( சுமார் ரூ.38,000 ) அமெரிக்க டாலர்களில் இருந்து 1,385 ( சுமார் ரூ. 1,10,000 ) அமெரிக்க டாலராக உயர்கிறது.
முதலீட்டாளர் விசாக்கள் அல்லது EB-5 விசாக்களுக்கான கட்டணம் 3,675 ( சுமார் ரூ.3,00,000 ) அமெரிக்க டாலரில் இருந்து 11,160 ( சுமார் ரூ. 9,00,000 ) டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 203 சதவீதம் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா கணிசமாக உயர்த்தியுள்ளது.
2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, H-1B, L-1 மற்றும் EB-5 ஆகிய மூன்று விசாகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.