சென்னை நகரில் காவல்துறையின் அதிரடி ஆபரேஷன்…. நடுங்கிப்போன ரவுடிகள்….!! 

Estimated read time 1 min read

சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த சுமார் 70 ரவுடிகளை, ஒரே இரவில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சமீபத்தில் திருவொற்றியூர் மற்றும் பெசன்ட் நகர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த கொடூரக் கொலைச் சம்பவங்கள், மக்கள் மத்தியிலும் பொது தளத்திலும் சட்டம் ஒழுங்கு குறித்த பல்வேறு கேள்விகளையும் அச்சத்தையும் எழுப்பியிருந்தது.

இந்தச் சூழலைத் தொடர்ந்து, மாநகரம் முழுவதும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த சென்னை மாநகரக் காவல் துறை மிகத் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியது. நகரில் சுற்றித்திரியும் தலைமறைவு குற்றவாளிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters) மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகளின் பட்டியலைத் தயாரித்து, அவர்களைக் காவல் துறையினர் இரவோடிரவாகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாநகர் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனை மற்றும் வேட்டையில், முதற்கட்டமாக 70 ரவுடிகள் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த விடிய விடிய நடந்த சர்ப்ரைஸ் ஆபரேஷன், சென்னையில் இயங்கி வந்த குற்றக் கும்பல்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கைதாகியுள்ள 70 பேரிடம் வழக்கு விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் பல ரவுடிகளையும் குற்றவாளிகளையும் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல் துறை எடுத்து வரும் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை மக்கள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவர்கள் மீது இனி தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று காவல் துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை இத்தகைய சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் மாநகரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author