இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் இயங்காது..!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பல்வேறு பயணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் வழங்கப்படும் பயணச் சலுகைகளை தனியார் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது தனியார் பேருந்து உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தனியார் பேருந்துகளில் இந்த வகையான இலவசப் பயணத்தை நடைமுறைப்படுத்தினால், அதன் காரணமாக பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசு ஈடுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதனால் செப்.30ஆம் தேதி தனியார் பேருந்து சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக தனியார் பேருந்துகளை தினசரி போக்குவரத்துக்காக நம்பியுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் மாற்று போக்குவரத்து வசதிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (செப்.28) தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்படும் நிலையில் தனியார் பேருந்துகளிலும் அதே நடைமுறையைச் செயல்படுத்தாவிட்டால் தனியார் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும்.

இதனால் தனியார் பேருந்துகளைச் சார்ந்துள்ள சுமார் 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல் தனியார் பேருந்துகளிலும், பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இலவசப் பயணத்தால் தனியார் பேருந்துகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு அரசு, தனியார் பேருந்துகளுக்கு மானியத்தை வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செப்.29- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்.30- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணி வரை 24 மணி நேரம், மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க மாட்டோம்” என்று அறிவித்துள்ளார்.

You May Also Like

More From Author