சூரிய வழிபாட்டுத் திருவிழாவை முன்னிட்டு டெல்லியில் 11 கிலோமீட்டர் நீளத்துக்கு பிரம்மாண்டமான வழிபாட்டுத் துறை அமைக்கப்பட்டுள்ளது. ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள முனக் கால்வாயின் இரு கரைகளிலும் இந்தத் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நவம்பர் 12-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கால்வாயின் இரு கரைகளிலும் படிக்கட்டுகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உடை மாற்றும் அறைகள், கழிப்பறைகள், கூடாரங்கள், மின்விளக்குகள் மற்றும் பாதுகாப்புக்காகக் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. பக்தர்கள் அமர இருக்கைகள், பசுமைப் பகுதிகள் மற்றும் கால்வாயில் சுத்தமான நீர் செல்லும் வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், இரு கரைகளுக்கும் இடையே எளிதாகச் செல்ல மூன்று பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் ஷாலிமார் பாக், வஜீர்பூர், மாடல் டவுன், ஆதர்ஷ் நகர், பத்லி ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு இது முக்கியமான வசதியாக இருக்கும். இந்த ஆண்டு 11 கிலோமீட்டர் பகுதி முழுவதும் வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மேம்பாட்டுப் பணிகளை அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பேசுகையில், இந்தத் திட்டம் மக்களின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் உணர்வுகளுக்கு அளிக்கும் மரியாதை என்று தெரிவித்துள்ளார்.
