முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளதாக துணைக் கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அணையின் நீர்மட்டம் 122.40 அடியாக இருந்தது. பிரதான அணை, பேபி அணை, மண் அணை மற்றும் நீர்க்கசிவு கேலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த குழுவினர், அணையின் 13 மதகுகளில் 2, 9, 12 ஆகிய மூன்று மதகுகளை இயக்கிப் பார்த்தனர்.
அப்போது, அணையின் செயல்பாடு சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அணையில் நிமிடத்திற்கு 32 ஆயிரத்து 250 லிட்டர் நீர்க்கசிவு பதிவானதோடு, நீர்மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவு இருப்பதால் அணையின் உறுதித்தன்மை சீராக உள்ளதாகக் குழுவினர் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆய்வு விவரங்கள் குறித்து விவாதித்த அதிகாரிகள், அறிக்கையை முதன்மைக் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பி வைத்தனர்.
