குட் நியூஸ்..! இனி ரேஷனில் மேம்படுத்தப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு உத்தரவு..!

Estimated read time 1 min read

தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர் களுக்கு அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, கார்டுதாரர்கள் தங்களுக்கான அரிசி ஒதுக்கீட்டில், பச்சரிசி, புழுங்கல் அரிசியை தேவைக்கு ஏற்ற அளவில் வாங்கிக் கொள்ளலாம். இந்த அரிசி, மத்திய அரசின் இந்திய உணவு கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.தமிழக விவசாயிகளிடம் இருந்து, இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், வாணிப கழகத்தின் அரவை ஆலைகள் மற்றும் தனியார் ஆலைகளில் பச்சரிசி, புழுங்கல் அரிசியாக மாற்றப்படுகிறது. இது, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்க மாதம், 3.30 லட்சம் டன் அரிசி தேவை. தற்போது, புழுங்கல் அரிசியில் உடைந்த அரிசி, 16 சதவீதமும், பச்சரிசியில், 25 சதவீதமும் இருக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இனி, ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் தரத்தை மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, ‘இம்ப்ரூவ்ட் ரைஸ்’ எனப்படும் மேம் படுத்தப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளது.

இந்த வகையில் புழுங்கல் அரிசியில் உடைந்த அரிசியின் அளவு, 5 சதவீதம், பச்சரிசியில் உடைந்த அரிசியின் அளவு, 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.இந்த அரிசி ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், சோதனை அடிப்படையில் தற்போது வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு முதல் வினியோகம் தொடங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author