திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகக் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இறுதியாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
அதன் பிறகு 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனிடையே, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிடக் கோரி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், வி.எஸ். பாபு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மருத்துவமனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் வி.எஸ். பாபுவின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், அண்ணாநகர் துணை ஆணையர் அர்பிதா ராஜ்குப்த் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
