lதமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த முக்கிய ரகசியங்கள் அண்டை மாநிலமான ஆந்திர அரசுக்குக் கசிந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஆலோசனை அமைப்பான ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 15 பேர் அண்மையில் அதிரடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் திருப்பமாக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ப்ரீஜா பிரசாத், கிறிஸ்டோ லாரல், பிரபாகரன் அண்டி ஆகிய 3 பேர் உடனடியாக ஆந்திராவின் பொருளாதார மேம்பாட்டு வாரியப் பணியில் இணைந்துள்ளனர். தாங்கள் ஆந்திர அரசுடன் இணைந்துள்ளதை இவர்கள் மூவரும் சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தின் தொழில் முதலீடுகள் தொடர்பான மிக முக்கியமான தரவுகளை (Data) அணுகும் பொறுப்புகளில் இருந்தவர்கள், இங்கிருந்து நீக்கப்பட்ட உடனேயே ஆந்திர அரசுப் பணியில் சேர்ந்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டிற்காகப் பணியாற்றியபோதே இவர்கள் ஆந்திர அரசுடன் தொடர்பில் இருந்தார்களா அல்லது தமிழகத்தின் முதலீட்டு ரகசியங்களை வைத்திருப்பதால் ஆந்திர அரசு இவர்களை உடனடியாகப் பணியில் அமர்த்தியதா எனக் கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தொழில் ரகசியங்களைப் பாதுகாப்பது தொடர்பாக முந்தைய அரசு இந்த நிர்வாகிகளுடன் முறையான காப்புரிமை மற்றும் ரகசியக் காப்பு ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளாமல் பணியில் எடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையை மேலும் தூண்டியுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் இந்த விவகாரம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
