சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தீவிரப் புயலான ‘அக்வான்’ (Akvan), தனது நகரும் வேகத்தை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு மணிக்கு 5 கிலோ மீட்டர் என்ற மிகக் குறைந்த வேகத்தில் மெதுவாக நகர்ந்து வந்த இந்தப் புயல், தற்போது வேகம் எடுத்து மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்பரப்பில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது பாதையையும் வேகத்தையும் மாற்றியுள்ள இந்தத் தீவிரப் புயல், தொடர்ந்து நகர்ந்து வரும் நவம்பர் 20-ஆம் தேதியன்று ஆந்திரப் பிரதேசத்தின் நரசாபூர் மற்றும் ஒடிசாவின் புரி ஆகிய பகுதிகளுக்கு இடையே, குறிப்பாகக் கோபால்பூருக்கு அருகே கிழக்கில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. கரையைக் கடக்கும் சமயத்திலும் இது ஒரு தீவிரப் புயலாகவே (Severe Cyclonic Storm) நீடிக்கும் என்பதால், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதே சமயம் இன்றயை வானிலை நிலவரத்தை பொறுத்தவரையில், 19-11-2026: தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22-11-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23-11-2026: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
