செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் படங்கள் மற்றும் பதிவுகள் பரப்பப்படுவதாகச் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ள மேயர் பிரியா, தமிழக வெற்றிக் கழகத் தலைமையுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு குழு, தன்னைத் தொடர்ந்து குறிவைத்து இத்தகைய இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அரசியல் மற்றும் பதவிகளைக் கடந்து ஒரு பெண்ணாகவும், தாயாகவும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்கள் தனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மேடைதோறும் பெண்களின் பாதுகாப்பு குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நடிகரும், தவெக தலைவருமான விஜய், தனது தரப்புடன் தொடர்புடையவர்களின் இதுபோன்ற இணையவழி அத்துமீறல்கள் குறித்து ஏன் இன்னும் மௌனம் காக்கிறார் என்றும் மேயர் பிரியா நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேயர் பிரியாவின் இந்த பதிவு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஏஐ (AI) தவறான சித்தரிப்புகள் மற்றும் இணையவழித் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த விவாதங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
