செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்ற நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்துப் பாதுகாப்பு ஆய்வாளர் நிகோலா ஜுர்கோவிக் எக்ஸ் தளத்தில் விரிவான கடிதம் ஒன்றைப் பகிர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வேலைகளை எளிதாக்கினாலும், அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக் கடுமையான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்படாவிட்டால், 2027 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றை விடவும் மோசமான சூழ்நிலைகள் உருவாகக்கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மனித மூளையை விடவும் ஏஐ திறன்மிக்கதாக மாறும் நிலை 2027-ல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், 2030-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மனிதகுலம் தனது கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் இழக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தனது கடிதத்தில் கணித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் மீதான மனிதர்களின் கட்டுப்பாடு படிப்படியாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே பல நிறுவனங்களின் அமைப்புகள் ஹேக் செய்யப்படுவது உள்ளிட்ட தீவிரமான சம்பவங்கள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மக்கள் தங்கள் பண்டிகைகள் மற்றும் விடுமுறைகளை வழக்கமான முறையில் கொண்டாட முடியாத சூழல் கூட உருவாகலாம் என்றும், அடுத்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பறிபோய் உலக மக்கள்தொகையில் பெரிய பகுதியினர் வேலையில்லாத நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இத்தகைய அபாயங்களைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் குடும்பத்திற்குத் தேவையான இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கான உணவுப் பொருட்களையும், பணத்தையும் சேமித்து வைத்துத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் உள்ள கணிப்புகள் அனைத்தும் அவரது சொந்த மதிப்பீடுகள் மட்டுமே என்றாலும், ஏஐ பாதுகாப்புத் துறையை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தையும், எதிர்காலச் சவால்களைச் சமாளிக்கத் தன்னை முழுமையாக அந்தத் துறையில் அர்ப்பணித்துக் கொண்டுள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமும் அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார விளைவுகளும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்த எச்சரிக்கை இணையத்தில் பலதரப்பட்ட கருத்துகளையும் விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
