காசி தமிழ் சங்கமம் 5.0 – சென்னையில் இருந்து செல்லும் மாணவர்களை வழி அனுப்பி வைத்த ஆளுநர்!

Estimated read time 0 min read

காசி தமிழ் சங்கமம் 5.0 நிகழ்ச்சிக்காக மாணவர்கள் காசிக்குப் பயணிக்கும் சிறப்பு ரயிலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மாணவர்கள் காசிக்குப் பயணிக்கும் சிறப்பு ரயிலை தொடங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் , ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டு சிறப்பு ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமோடி, நடப்பாண்டில், காசி மற்றும் திருக்குறள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

திருக்குறள் மற்றும் காசி குறித்த புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆன்லைன் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்கள் காசி தமிழ்ச் சங்கமத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார். நவம்பர் 28 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தில், 7 சிறப்பு ரயில்கள் மூலம் ஆயிரத்து 500 பேர் பயணிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய மாணவர்கள், காசி தமிழ் சங்கமம் குறித்து அறிந்ததும் பயணத்திற்குப் பதிவு செய்ததாகவும், தொடர்ந்து திருக்குறள் மற்றும் தமிழ் மொழி தொடர்பான கேள்விகள் இடம்பெற்ற வினாடி வினா போட்டியில் பங்கேற்றதாகவும் கூறினர்.

பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தாங்கள் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறிய மாணவர்கள், இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

இந்த வாய்ப்பை ஏற்படுத்திய மத்திய அரசுக்கும் சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author