தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை போலவும், ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ், இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.