மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்?

Estimated read time 1 min read

சீன அதிபரின் இந்தியப் பயணம் ஏற்படுத்தும் புவிசார் அரசியல் தாக்கம் குறித்து சர்வதேச ஊடகங்களில் வெவ்வேறு கோணங்களில் செய்தி கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2020-ல் இந்திய- சீன எல்லையில் லடாக் பகுதியில் கல்வான் பள்ளத் தாக்கில் ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் சீனா இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது.

2024-ல் ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்த உரையாடிய பிறகு இரு நாடுகளும் அரசியல் மற்றும் வர்த்தக உறவில் ஒரு இணக்கத்தைத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா மற்றும் இந்தியாவுக்கு அதிகமான பரஸ்பர வரிகளை விதித்தது இரு நாடுகளுக்கும் அமெரிக்கா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தியே ஒரு இணக்கமான இராஜதந்திரத்தை ஏற்படுத்த இரு தலைவர்களும் நெருங்கி வருவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுருக்கமாக அமெரிக்கா-சீனா-இந்தியா இடையேயான உறவில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாகவே இந்தியா பக்கம் சீனா நெருங்கி வருவதாக கூறப் படுகிறது.

இதற்கிடையே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்புக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்து வரும் சீனா, இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தைக் குறைப்பதற்காகவே குவாத் அமைப்பு அமெரிக்க ஆதரவுடன் செயல்படுவதாக கருதுகிறது.

அதேசமயம் அமெரிக்காவுடன் குவாத் அமைப்பின் மூலம் இந்தியா இணைந்து செயல்படுவது தான் சீனாவுக்குப் பெரும் கவலையாக இருப்பதால் இந்தியாவுடனான உறவை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பைச் சீனா நிச்சயமாக நழுவ விடாது என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் சீன அதிபரும் இந்திய பிரதமரும் நேரில் சந்திப்பது ராஜதந்திரத்தின் உச்சகட்டமாக பார்க்கப் படுகிறது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சரிசெய்வதே இந்த சந்திப்பின் நோக்கமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 12.4 சதவீதம் உயர்ந்து, சாதனை அளவாக 155 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்த ஆண்டு வர்த்தகம் மேலும் உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஒரு நுட்பமான புவிசார் அரசியல் சமநிலைப்படுத்தும் செயலாக பிரதமர் மோடி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பார்ப்பதாக கூறப்படுகிறது.

சீனாவை ஒரு போட்டியாளராகக் கருதும் இந்தியா, உலக விவகாரங்களில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க விரும்பினாலும், ரஷ்யா போன்ற பிற பிரிக்ஸ் உறுப்புநாடுகளை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் அமெரிக்காவிற்கு முற்றிலும் எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமலும் சாதுரியமாக இந்த உச்சிமாநாட்டை தலைமையேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அதிபரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திரப் பனிப்போரைக் குறைத்தாலும், எல்லைப் பிரச்சனை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக இரு தரப்புக்கும் இடையே உள்ள “நம்பிக்கை பற்றாக்குறை” மற்றும் கடுமையான முதலீட்டுக் கட்டுப்பாடுகள் எந்த அளவுக்கு நீங்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

You May Also Like

More From Author