இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபாரமாக மீண்டு வந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் வெறும் 133 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 320 ரன்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான், 2-வது இன்னிங்ஸில் 449 ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு அதிரடி பதிலடி கொடுத்துள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 2-வது முறை மட்டுமே. இதற்கு முன்பு கடந்த 1962-ஆம் ஆண்டு கராச்சி டெஸ்டில் 404 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தற்போது 64 ஆண்டுகள் பழமையான அந்த வரலாற்றுச் சாதனையை பாகிஸ்தான் மீண்டும் நிகழ்த்தியுள்ளது.
2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்குச் சாம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி கடும் அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர் அஸான் அவாய்ஸ் மற்றும் ஷான் மசூத் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து பாபர் அசாம் 76 ரன்கள் அடிக்க, ஒருகட்டத்தில் 318 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.
அப்போது 9-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அறிமுக வீரர் ரசாவுல்லா மற்றும் முகமது அப்பாஸ் கூட்டணி இங்கிலாந்து பந்துவீச்சைச் சிதைத்து ஆட்டத்தையே மாற்றியது. டி20 பாணியில் வெளுத்து வாங்கிய ரசாவுல்லா, வெறும் 63 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். முகமது அப்பாஸ் 42 ரன்கள் அடிக்க, இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்து மாஸ் காட்டியது.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பியதோடு, 449 ரன்கள் குவித்து வலுவான நிலையை அடைந்தது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 129 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன், இங்கிலாந்து அணி வெற்றி பெற 130 ரன்களை இலக்காக நிர்ணயித்து ஆட்டத்தை விறுவிறுப்பான கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
