சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் சுமார் 7 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், அந்தப் பணம் லாட்டரி அதிபர் மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததன் மூலமாக திரட்டப்பட்ட தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
அதன்பேரில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மனைவி லீமாரோஸ் ஆகியோருக்கு எதிராக பதியப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆலந்தூர் நீதிமன்றத்தின் முடிவு தவறானது என கடந்த மாதம் கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், வழக்கை விசாரணை அமைப்புகள் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.
‘இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, தியாகராய நகரில் உள்ள அலுவலகம், அவரது மகன் சார்லஸின் இல்லம், அவருக்குச் சொந்தமான நிறுவனம், மருமகனும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு, கோவை துடியலூரில் உள்ள லாட்டரி மார்ட்டினின் வீடு, அருகிலேயே உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஒரே நேரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், ஹரியானாவின் ஃபரிதாபாத், லூதியானா, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது.