வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து பழனி மலைக்கோயில் ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனி முருகன் கோயிலுக்கு செல்வதற்கு படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் அகியவை செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக தினமும் ஒரு மணி நேரம், மாதத்தில் ஒரு நாள் மற்றும் வருடத்தில் ஒரு மாதம் ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுதடைந்த மோட்டார், இரும்பு வட கம்பி உள்ளிட்ட பாகங்கள் மாற்றப்பட்டன.
இதனையடுத்து பணிகள் நிறைவடைந்து கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் இன்று முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை செயல்பாட்டுக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.