வேகமாக குறையும் மேட்டூர் அணை நீர்மட்டம்!

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 97 கன அடியிலிருந்து, 86 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.05 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 69.42 அடியாக குறைந்துள்ளது.

அணையில் தற்போது 32.20 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 5 ஆயிரத்து 600 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், காவிரி டெல்டா பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

You May Also Like

More From Author