“அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு”… இது தண்டனையோ, நற்பெயருக்கு களங்கமோ அல்ல… அரசு எடுக்கும் முடிவு சரிதான்… முக்கிய வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!! 

Estimated read time 1 min read

அரசு ஊழியர்களைக் கட்டாய ஓய்வில் அனுப்புவது என்பது தண்டனையோ அல்லது அவர்களின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் களங்கமோ அல்ல என்றும், இது முழுக்க முழுக்க நிர்வாகத்தின் நலன் மற்றும் பொதுச் சேவையின் திறனை மேம்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநில அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு 14 ஊழியர்களின் சேவைப் பதிவேடுகளை ஆய்வு செய்து, அதில் 5 ஊழியர்களைக் கட்டாய ஓய்வில் அனுப்பியது. மாநில அரசின் இந்த முடிவைச் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்துப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து மனுவைத் தள்ளுபடி செய்தது.

கட்டாய ஓய்வு அளிப்பது என்பது தண்டனையோ அல்லது ஒரு ஊழியரின் நடத்தையில் தவறைக் சுட்டிக்காட்டும் களங்கமோ கிடையாது. பொது நலன் கருதியும், நிர்வாகத்தின் தரம் மற்றும் திறனைப் பேணுவதற்காக மட்டுமே இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ஒரு ஊழியர் நிர்வாகத்திற்கு இனிப் பயனுள்ளவராக இருப்பாரா அல்லது அவரது சேவை நிர்வாகத் திறனைப் பாதிக்குமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசுக்கே உள்ளது. இருப்பினும், இந்த முடிவு வெறுமனே ஒருவரின் தன்னிச்சையான விருப்பத்தின் பேரில் எடுக்கப்படக் கூடாது; ஊழியரின் வருடாந்திர ரகசிய அறிக்கைகள் செயல்பாட்டு மதிப்பீடுகள் மற்றும் சேவைப் பதிவேடுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும்.

“இதேபோன்று சேவைப் பதிவேடு கொண்ட மற்றொரு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காதபோது, என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என எதிர்மறைச் சமத்துவக் கொள்கையைக் காரணம் காட்டி கட்டாய ஓய்வை எதிர்க்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவு நேர்மறையான சமத்துவத்தையே பிரதிபலிக்கிறது. ஒருவருக்குத் தவறாக அளிக்கப்பட்ட விலக்கு, மற்றவருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில்லை.

நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட இந்த முடிவில் போதிய ஆதாரங்கள் உள்ளதா, தகுந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்யுமே தவிர, அப்பணியைச் செய்யும் மேல்முறையீட்டு அதிகாரியாக நீதிமன்றம் செயல்படாது.

சத்தீஸ்கர் மாநில அரசு உரிய நடைமுறைகளைப் பின்பற்றியும், திரையிடல் குழுவின் தகுந்த ஆய்வுக்குப் பிறகே இந்த 5 ஊழியர்களையும் ஓய்வில் அனுப்பியுள்ளது என்பதால், இதில் பாகுபாடு எதுவும் இல்லை எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஊழியர்களின் மனுவை முழுமையாக நிராகரித்தது.

Please follow and like us:

You May Also Like

More From Author