சுருளி சாரல் திருவிழா 2025 வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தகவல்

Estimated read time 1 min read

கம்பம், செப். 26 தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் திருவிழா-2025” வருகின்ற 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுருளி சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவில் செய்தித்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், காவல்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
மேலும், மகளிர் சுய உதவி குழுக்கள் தயார் செய்யும் பொருட்கள் கண்காட்சி, சிறுதானிய உணவு வகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனைகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, விதை சான்றளிப்புத்துறையின் சார்பில் மலர் செடிகள், மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை மேலும் சுற்றுலா பயணிகளை உற்சாகபடுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவரும் கலை நிகழ்ச்சிகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி, சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் நிகழ்ச்சி, சமூகநலத்துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்தான உணவுகள் குறித்து விழிப்புணர்வு என பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, குடிநீர் வசதி, சிறப்பு பேருந்து, வாகன நிறுத்துமிட வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுருளி சாரல் திருவிழாவில் பங்கேற்று இவ்விழாவினை மேலும் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author