சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஆர். வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் 10,000 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்த சம்பவம், டெல்டா பகுதி அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, வெறும் இணைப்பு விழா அல்லாமல், உண்மையான மாநாடு போன்ற பிரம்மாண்டமான திரளுடன் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் குவிந்து, திமுகவின் வளர்ச்சி மற்றும் மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை தெளிவாகக் காட்டியது. “இது இணைப்பு விழாவா… இணைப்பு விழா மாநாடா!” என்று வியப்புடன் குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இந்நிகழ்வை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாராட்டினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில், வைத்திலிங்கத்தை சிறப்பாகப் பாராட்டினார். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறார்” என்று உரத்த குரலில் கூறி, கைதட்டல்களைப் பெற்றார்.
எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வைத்திலிங்கம் திமுகவில் பணியாற்றுவார், டெல்டா பகுதியில் கழகத்துக்கு புதிய வலிமையை அளிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு முழுமையாக இருப்பதாகவும் தெரிவித்தார். வைத்திலிங்கத்தின் இணைப்பு, திமுகவுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலில் புதிய சமநிலையை உருவாக்கும் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் கழகத்தின் செல்வாக்கு மேலும் வலுப்பெறும் என்பது தெளிவாகத் தெரிகிறது.எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்குப் பிறகு, சட்டமன்றத்தில் வைத்திலிங்கம் எப்படி வேண்டா வெறுப்புடன், எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் என்பதை நினைவுகூர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான உண்மையான காரணம் இப்போது தெளிவாகப் புரிகிறது என்றார். “சுய மரியாதை மிக முக்கியம்… அதை வைத்திலிங்கம் உணர்ந்தார்” என்று பெருமிதத்துடன் கூறினார்.
இந்த வார்த்தைகள், வைத்திலிங்கம் திமுகவுடன் இணைவதற்கு எடுத்த முடிவின் ஆழமான பின்னணியை வெளிப்படுத்தின. சுய மரியாதைக்காகக் காத்திருந்த அவர், இப்போது திராவிட இயக்கத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராகியுள்ளார் என்பது திமுக தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.”வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை வென்று வரலாறு படைப்போம்!” என்று முழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!” என்ற முழக்கத்தை எழுப்பினார். இந்த அறிவிப்பு, நிகழ்ச்சி முழுவதும் ஆரவார அலைகளை ஏற்படுத்தியது.
