அண்ணா பதக்கத்திற்கு டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு..!

Estimated read time 1 min read

வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு;-

வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடை பணியாளர்கள் உட்பட) இப்பதக்கங்கள் வழங்கப்படும்.

பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை. இவ்விருது ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்)-க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதலமைச்சரால் 26.01.2026 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

2026-ஆம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படுகின்றன. வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீரதீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் முறையாக நிரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வீரதீரச் செயல்களுக்கான அண்ணா விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15 டிசம்பர், 2025 ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author