திருமலையில் ரதசப்தமி : ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் மலையப்பசுவாமி!

Estimated read time 1 min read

ஜனவரி 25ம் தேதியன்று ரத சப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி, ஏழு விதமான வாகனங்களில் மாட வீதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

திருமலையில் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்று ரத சப்தமி. வருடந்தோறும் ரதசப்தமி நாளில் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிவது உண்டு.

ரத சப்தமியை , மகா சப்தமி என்றும் அழைப்பது உண்டு. மகா மாதம் எனப்படும் தை மாதத்தில் வரும் வளர்பிறத சப்தமியில் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. வேத சாஸ்திரங்களின் படி, இந்த நாளே சூரிய பகவான் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. ஞானத்திற்கு கடவுளாக போற்றப்படும் சூரிய பகவானின் அவதார தினம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ரத சப்தமிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. மினி பிரம்மோற்சவம் என போற்றப்படும் ரத சப்தமி அன்று மலையப்ப சுவாமியை ஒரே நாளில் ஏழு விதமான வாகனங்களில் தரிசிக்க முடியும்.

வாகனங்கள் வீதி உலா புறப்படும் நேரம்:

சூரிய பிரபை வாகனம் காலை 5.30 மணி முதல் 8.00 மணி

சின்னசேஷ வாகனம் காலை 9 மணி முதல் 10.00 மணி

கருட வாகனம் பகல் 11.00 மணி முதல் பகல் 12.00 மணி

அனுமன் வாகனம் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி

கற்பகவிருட்சம் வாகனம் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி

சர்வ பூபாள வாகனம் மாலை 6.00 மணி முதல் 7.00 மணி

சந்திர பிரபை வாகனம் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி

சூரியனை ஆராதிக்கும் இந்தத் திருநாளில் சூரிய பகவானின் அதிதேவனான நாராயணனும் கொண்டாடப்படுகிறார். அதனால்தான் திருமலை திருப்பதியில் இந்த நாளில் `ஒரு நாள் பிரமோற்சவ விழா’ நடத்தப்படுகிறது. புரட்டாசி பிரமோற்சவத்தைக் காண தவறியவர்கள் இந்த ஒரு நாள் ரத சப்தமி பிரமோற்சவத்தைக் கண்டு மகிழ்வார்கள்.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக உணவு, நீர் மோர், குடிநீர் ஆகியவை அதிக அளவில் வழங்குவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆர்ஜித சேவைகளான அஷ்டதள பாத சேவை, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்ஸவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், தினமும் அதிகாலையில் நடைபெறும் சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை ஆகிய சேவைகள் வழக்கம் போல் நடைபெறும்.

Please follow and like us:

You May Also Like

More From Author