அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடா நாடு சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிலிருந்து வரும் பொருட்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கனடா ஒரு நுழைவு வாயிலாகவோ அல்லது ‘டிராப் ஆஃப் போர்ட்’ ஆகவோ மாறினால் அதனைத் தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனாவுடன் நெருக்கமான உறவு வைத்துக்கொண்டால் அது கனடாவின் வணிகங்களையும், சமூகக் கட்டமைப்பையும் முற்றிலுமாக சிதைத்துவிடும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னியை ‘கவர்னர்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்ட டிரம்ப், கனடா-சீனா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினால் உடனடியாக இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார உச்சி மாநாட்டில், கனடா அமெரிக்காவை மட்டும் சார்ந்து இல்லாமல் தனது வர்த்தகத்தை உலக நாடுகளுடன் விரிவுபடுத்த விரும்புவதாக மார்க் கார்னி பேசியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், தனது ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ கொள்கையை நிலைநாட்டவும் டிரம்ப் இந்தத் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், அமெரிக்கா-கனடா இடையிலான பல தசாப்த கால நட்பு மற்றும் வர்த்தக உறவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
