நல்லதோர் வீணை.

நல்லதோர் வீணை!

கவிஞர் இரா. இரவி

நல்லதோர் வீணை நம் குழந்தை
நலம் கெட புழுதியில் எரிவது முறையோ?

பிறந்தது பெண் குழந்தை என்று தெரிந்தால்
பேசாமல் தெருவில் வைத்து விடும் அவலம்!

பிஞ்சுக் குழந்தை செய்திட்ட குற்றமென்ன ?
பிறந்த குழந்தைக்குத் தண்டனை தரலாமோ?

குழந்தையில் ஆண் என்றால் மதிப்பதும்
குழந்தை பெண் என்றால் மதிக்காததும் ஏனோ?

கணினியுகத்திலும் நாட்டில் இன்னும் சிலர்
காட்டு மிராண்டிகளாக நடப்பது தான் சரியோ?

பெண்ணுரிமை பேச்சு அளவிலேயே உள்ளது
பிறக்க உரிமை இல்லாத அவல நிலையே!

ஆணை வரவென்றும் பெண்ணை செலவென்றும்
அறிவிலித்தனமாகப் பேசுவதை முதலில் நிறுத்துங்கள்!

கள்ளிப்பால் ஊற்றும் கொடுமையை ஒழியுங்கள்
கனிவோடு பெண் குழந்தையை வளருங்கள்!

நெல்மணிகளிட்டு கொலை செய்வது நிறுத்துங்கள்
நிலத்திற்கு வந்த மாமணியாக மதித்து வளருங்கள்!

பிறந்த பெண் குழந்தையிடம் பாசம் காட்டுங்கள்
பேதலிக்காது பெருமையோடு மகளை வளருங்கள்!

பெண் இனத்தின் சாதனைகள் சொல்லில் அடங்காது
பெருமைமிகு பெண் இனத்தை வளர விடுங்கள்!

ஆணாதிக்கம் சிந்தனைகளை அழித்து விடுங்கள்
ஆண், பெண் சமம் நினைவில் கொள்ளுங்கள்!

மூச்சு உள்ளவரை பாசம் காட்டுபவள் மகள்
மோசம் செய்யாது நேசம் வைப்பவள் மகள்!

வயிற்றிலிருந்து வந்த தேவதை மகள்
வையகத்தின் மகிழ்வை உணர்த்துபவள் மகள்!

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி செய்பவள் மகள்
வாய்விட்டுச் சிரித்து கவலை களைபவள் மகள்!

நல்லதோர் வீணை நம் பெண்குழந்தை
நாளும் போற்றி சீராட்டி வளர்த்திடுவோம்!

Please follow and like us:

You May Also Like

More From Author