உலக அளவில் ஜனநாயகத் தர நிலைகள் பற்றி பாடம் எடுப்பது, ஜனநாயகத்துக்கு மாறக் கோருவது உள்ளிட்ட அமெரிக்காவின் செயல்கள் குழப்பத்தையும், இடர்களை மட்டுமே கொண்டு வருகிறது. ஜனநாயகம் என்பதைப் பயன்படுத்தி தனது நலனுக்காக பிற நாடுகளை அமெரிக்கா கட்டுப்படுத்தி வருவதாக சிஜிடிஎன் மற்றும் ரென்மின் பல்கலைக்கழகத்தின் கருத்துக் கணிப்பில் பலரும் தெரிவித்துள்ளனர்.
மனிதகுலம் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக விழுமியங்களை, புவிசார் அரசியலில் முன்னேற்றம் காண பயன்படுத்தக் கூடாது.
அமெரிக்கா, தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே ஜனநாயகம் என்ற கருத்தை நீண்ட காலமாகக் கையாண்டு வருகிறது. பிரிவினை மற்றும் மோதலைத் தூண்டும் அமெரிக்கா, ஐ.நாவை மைய அமைப்பு முறையையும், சர்வதேச சட்ட ஒழுங்கையும் சிதைத்து வருகிறது.
கருத்துக் கணிப்பில், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக 71 விழுக்காட்டினரும், தடை, பொருளாதார நிர்பந்தம் உள்ளிட்ட வழிமுறைகளிலான அமெரிக்காவின் மேலாதிக்கவாதம் அதிருப்தி அளிப்பதாக 62.3 விழுக்காட்டினரும் கூறியுள்ளனர்.
மேலாதிக்க நடைமுறையை அமெரிக்கா கூடிய விரைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று 86.8 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.அதேபோல், பிற நாடுகளின் அரசியல் வழிமுறையை மாற்ற வேண்டும் என்று அமெரிக்கா கட்டாயப்படுத்துவதற்கு 65.8 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளின் வழிமுறைகளிலும், கலாசாரங்களிலும் ஜனநாயகத் தன்மை பரவியுள்ளது என்று 84.3 விழுக்காட்டினரும், ஒரு நாட்டின் அரசியல் முறை பற்றி தீர்மானிக்கும்போது அதன் வரலாறு, கலாசாரம், தேசிய சூழல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று 84.8 விழுக்காட்டினரும் பதிவு செய்துள்ளனர்.