வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்துள்ள நிலையில் இந்தியா தனது எரிசக்தித் தேவைகளுக்காக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா முப்பது நாட்கள் தற்காலிக அனுமதி அளித்துள்ளது. இது குறித்துப் பேசிய அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் அதிபர் டிரம்பின் எரிசக்தி கொள்கையினால் எண்ணெய் உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலகச் சந்தையில் எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை வாங்க இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கை ஈரானின் அழுத்தத்தைக் குறைக்கவும் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு இந்தியா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா எப்படித் தீர்மானிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு இந்தியா எந்த நாட்டில் இருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா எந்த நாட்டிற்கும் அடிமையல்ல என்றும் இறையாண்மை கொண்ட சுதந்திரமான நாடு என்றும் தெரிவித்துள்ள அக்கட்சி அமெரிக்காவிடம் இந்தக் கேள்வியைக் கேட்க பிரதமர் மோடி தயங்குவதாக விம்சித்துள்ளது. மத்திய அரசு அமெரிக்க நலன்களுக்கு நாட்டை அடமானம் வைத்துவிட்டதாகவும் இது தேசத்திற்கு வெட்கக்கேடானது என்றும் காங்கிரஸ் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளது.
