மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

Estimated read time 1 min read

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொள்வதற்காக கோவை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு மாவட்டம் சிவகிரிக்கு சென்றார். அப்போது அவருக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து திறந்த வாகனத்தில் சாலை பேரணியாக சென்றார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மீது மலர்களை தூவி அமித்ஷா உற்சாகமடைந்தார்.

இதனை அடுத்து பேசிய அமித்ஷா, தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் இழந்த பெருமைகள் அனைத்தையும் மீட்டெடுப்போம் என தெரிவித்தார். கருணாநிதியின் குடும்ப ஆட்சியால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த பயனும் கிடைக்கவில்லை என கூறினார்.

அனைத்து பெண்களும் அரசியலில் பங்கெடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மகளிர் மசோதாவை திமுக வீழ்த்தியது எனக்கூறிய அவர், மகளிர் வளர்ச்சிக்கு துரோகம் இழைக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசியலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் திமுகவும், காங்கிரசும் செயல்படுகிறது என குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழகத்திற்கு 50 சதவீத தொகுதிகள் அதிகரித்திருக்கும் என தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author