காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்!

Estimated read time 1 min read

ஆரோக்கியம் காப்பதே மனித நல் வாழ்விற்கான அடிப்படை செயல். உடலின் அன்றாட இயக்கம் தடைபடும்போது தன்னம்பிக்கை தளர்ந்து, இயலாமை ஆட்கொள்கிறது.
தனிநபரின் ஆரோக்கியக் குறைபாடு சமுதாயத்தின் குறைபாடாக மெல்ல மெல்ல உருமாறுகிறது. உடலை நோயின்றி காக்கும் பொறுப்பு அனைவருக்குமானதாகும்.
இதில் பலவகை பிரிவுகள் இருந்த போதிலும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடிய தொற்று நோய்கள், மனித குலத்தை அச்சுறுத்துபவையாக கண்டறியப்பட்டுள்ளன.
அத்தகைய ஒன்றுதான் TB என்று அழைக்கப்படும் காசநோய் இது Mycobacterium Tuberculosis என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாக அறியப்படுகிறது.
காற்றில் பரவும் தன்மையுள்ள இந்த நோய், பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ வெளியேறும் கிருமிகள் மூலம் மற்றவர்களுக்கு பரவுகிறது.
இது முக்கியமாக நுரையீரலை தாக்கும். ஆனால் மூளை, சிறுநீரகம், முதுகுத்தண்டு போன்ற உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தானதாக முடியும்.

எனவே இந்நோய் உண்டாக்கும் பாதிப்புகளை அறிந்து கொள்வதற்கும், இதனை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1882-ம் ஆண்டு காசநோயை உண்டாக்கும் பாக்டீரியாவை டாக்டர் ராபர்ட் கோச் கண்டறிந்ததை நினைவுபடுத்தும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இருமல், மார்பு வலி, மாலை நேர காய்ச்சல், அதீத வியர்வை, திடீர் எடை இழப்பு, பசியின்மை ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். உடலில் கிருமித் தாக்குதல் இருந்த போதிலும் அறிகுறிகள் காண்பிக்காமல் பாதிப்பை ஏற்படுத்தும்.
பிறிதொரு வகையும் இதில் காணப்படுகிறது. எந்த ஒரு நிலையிலும் மருத்துவரின் ஆலோசனையை உடனடியாக பெறுதல் அவசியம். ஆரம்ப நிலையிலே நோயைக் கண்டறிவதன் மூலம் விரைவில் தீர்வு காண முடியும்.
வருமுன் காக்கும் முயற்சியாக, BCG (Bacillus Calmette Guerin) எனப்படும் தடுப்பூசியை செலுத்தியும் பயன்பெற முடியும். காசநோய் இல்லா உலகத்தை உருவாக்குவதற்கான செயல் திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கவும் உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
“ஆம் – நாம் காச நோயை முடிவுக்குக் கொண்டு வரலாம். நாடுகளால் வழிநடத்தப்படுகிறது. மக்களால் இயக்கப்படுகிறது” என்ற கருப்பொருளுடன் இந்த வருடத்தின் நிகழ்ச்சிகள் அமைய உள்ளன.
நோயற்ற சமுதாயத்தை உருவாக்க அனுசரிக்கப்படும் ஒரு முக்கிய சுகாதார தினமாக இது கருதப்படுகிறது.
இந்நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு மேற்கொள்கிறது.
நீண்ட கால antibiotic சிகிச்சைகள் மூலம் காச நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்ற செய்தியை உணர்த்துவதே இந்நாளின் முக்கிய நோக்கம்.
“ஆரோக்கிய கோட்பாடுகளை பின்பற்றுவோம். தொற்று நோயை வெல்வோம்”.
– எஸ்.வாணி

#உலககாசநோய்தினம் #காசநோய் #TB #ஆரோக்கியம் #தன்னம்பிக்கை #இயலாமை #தொற்றுநோய் #மைகோபாக்டீரியம்டியூபர்குலோசிஸ் #பாக்டீரியா #டாக்டர்ராபர்ட்கோச் #இருமல் #பிசிஜி #ஆண்டிபயாட்டிக் #உலககாசநோய்தினம்2026 #WorldTuberculosisDay #WorldTuberculosisDay2026 #Tuberculosis #MycobacteriumTuberculosis #RobertKoch #Cough #BCG #BacillusCalmetteGuerin #Antibiotic #Health #InfectiousDisease #Hope #Awareness

Please follow and like us:

You May Also Like

More From Author