1. ஒரு நாள் தேநீர் அருந்திக்கொண்டு இருக்கும் போது ரொட்டி ஒன்று வாங்கினேன். அதை ஒரு காகிதத்தில் வைத்துத் தந்தார்கள். சாப்பிட்டு விட்டு அதைத் தூக்கி எறிய முற்பட்டபோது, அந்தக் குப்பை எனக்கு ஒரு தங்கமாக மாறியது. அந்த தாளில் “மனிதன் இரண்டு இடங்களில் தான் மண்டியிட வேண்டும் ஒன்று தாயின் காலடியின் கீழே. இன்னொன்று சுனை ஊற்றின் தண்ணீரை அள்ளிப் பருகும்போது” என்று எழுதியிருந்தது.
2. அதில் என்னை மிகவும் ரசிக்க வைத்த வார்த்தை, குழந்தையின் தொட்டிலில் அவர்கள் எழுதிய வார்த்தை ‘சிறிய குழந்தைகளும் பெரிய கனவுகளை காண்கிறார்கள்’
3. கிளாசிக் என்றாலே யாரும் படிக்க மாட்டார்கள். நான் கிளாசிக் ஆகாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தான் என்னை கிளாசிக் ஆக்காமல் எனது தவறுகளைக் கண்டுபிடித்து படியுங்கள்.
4. ஒரு நல்ல வாசகன் எழுத்தாளனோடு சண்டை போட்டுக் கொண்டு தான் படிப்பான். என்னுடைய எழுத்துகளையும் வாசகன் அப்படித்தான் படிக்க வேண்டுமென எண்ணுகிறேன். அது தான் எழுத்தாளனுக்கு வாசகன் தரும் மரியாதை.
5. யாரும் நம்மை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கலைஞனுக்கு இருக்கவே கூடாது. சிந்தனையைத் தூண்டக் கூடிய, வாதங்களை உருவாக்கக்கூடிய, கருத்துக்களை வாததுக்கு அழைக்கக்கூடிய எழுத்துக்களை எழுதுவது தான் நம் வேலை.
6. இலக்கிய ஆளுமை எனச் சொல்லப்படுபவர்களின் அங்கீகாரம் நமக்குத் தேவை இல்லை என்ற எண்ணம் வர வேண்டும். ஆகவே எழுதி முடித்த பிறகு ‘இது எப்படி இருக்கிறது’ என்று பெரிய எழுத்தாளர் என்று நினைத்து கொள்பவர்களிடம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
7. நாயக்கர் கால சிற்பத்தில் இருக்கும் பெண்கள் எல்லாம் உயரம் குறைவாக கட்டையாக இருப்பார்கள். ராஜாக்களும் தொப்பையும் தொந்தியுமாக இருப்பார்கள். இதே திருநெல்வேலியில் இருக்கும் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களில் ஒல்லியான சிற்பங்களை பார்க்கலாம். இந்த மாற்றங்கள் சிற்பங்களில் ஏற்பட்டது போல மனித வாழ்விலும் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தான் இப்போது நான்” இயந்திர அழகியல்” என்கிறேன். இது ஓவியத்தில் நடந்துள்ளது. இலக்கியத்திலும் நடைபெற வேண்டும்.
8. நான் வாழாவிட்டாலும் என் எழுத்து வாழும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. தற்காலத்தில் உங்கள் எழுத்து வாழ வேண்டும். அதற்கு நிகழ்கால அழகியலை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் மேதமைகள் என நினைத்து பழைய அளவு கோலை வைத்துக்கொண்டு அளந்து கொண்டு இருந்தால், கணக்கு தப்பாகவே வரும். ஏனெனில் அந்த அளவுகோலை உடைத்து எறிந்துவிட்டது தற்கால இயந்திர அழகியல்.
9. முகநூல் கவிஞர்களால் கவிதை கெடலாம் ஆனால் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழைப் பேசாத, எழுதாத ஒரு சமூகத்தை எழுத அழைத்து வருகிறது முகநூல். உன்னதமான கவிதைகள் எழுத முகநூல் தேவை இல்லை. கழிவறைச் சுவர் கூட போதும். எங்கே எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம் என்பது தான் முக்கியம்.
10. ஆத்திசூடி, திருக்குறள் நூலினைப் போல எனது கவிதை நூலினையும் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்று எண்ணினேன். எனது எழுத்தினை மற்றவர்கள் திருடி விடுவார்கள் என்று எண்ணம் எனக்கில்லை. மற்றவர்களை திருடத்தூண்டக் கூடிய எழுத்துகளை எழுத வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
- பேட்டி கண்டவர் நா.வே.அருள்
– நன்றி – விகடன்