சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 24ஆம் நாளில், அழைப்பின் பேரில், ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
இதில் பிராந்திய நிலைமையின் வளர்ச்சி தொடர்பான புதிய தகவல்களை அராக்சி அறிமுகப்படுத்தினார். சீனா வழங்கிய அவசர மனித நேய உதவிக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஈரானின் மக்கள் ஒன்றுபட்டு, வெளிநாட்டின் ஆக்கிரமிப்பைக் கூட்டாக எதிர்த்து, நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பேணிக்காக்க பாடுபடுவர் என்றார்.
தற்காலிகமான போர் நிறுத்தம் மட்டுமின்றி, பன்முகப் போர் நிறுத்தத்தை நனவாக்க ஈரான் முயற்சி செய்யும் என்றும், ஹோர்முஸ் நீரிணை அனைவருக்கும் திறந்திருக்கிறது. கப்பல்களும் இந்நீரிணை வழியாகப் பாதுகாப்பாக பயணிக்க முடியும். ஆனால், போரில் ஈடுபட்டுள்ள தொடர்புடைய நாடுகளுக்கு இந்த உரிமை அளிக்கப்பட மாட்டாது என்றும் அராக்சி தெரிவித்தார்.
பல்வேறு தரப்புகள் பதட்ட நிலைமையைத் தணிவு செய்வதற்கு துணை புரியும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மோதலைத் தீவிரமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்றார்.
சீனாவின் நிலைப்பாட்டை வாங்யீ விளக்கிக்கூறினார். அவர் கூறுகையில், பேச்சுவார்த்தையின் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். தொடர்புடைய தரப்புகள் அமைதிக்கான வாய்ப்பு மற்றும் வழிமுறைகளைக் கடைபிடித்து, அமைதி பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும். நியாயமான நிலைப்பாட்டைக் கடைபிடிக்கும் சீனா, போர் நிறுத்தத்தை ஊக்குவித்து, பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தை நனவாக்க பாடுபடும் என்றார்.
