தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தல் 2026 முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு ‘தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10-11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கட்டாயமாகியுள்ளது.
தவெக 108 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. விஜய் இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளதால், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். சபாநாயகர் ஒருவரை நியமித்தால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தவெக-வின் பலம் 106 ஆகக் குறையும்.
இதனால் ஆட்சி அமைக்க விஜய்க்கு இன்னும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கட்டாயம் தேவை. தற்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மொத்தம் 20 இடங்களை வைத்துள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் (5), விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2), தேமுதிக (1). அதிமுக கூட்டணியில் பாமக (4), பாஜக (1), அமமுக (1). இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் தங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி தவெக-விற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே விஜய் முதலமைச்சராக முடியும்.
தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமைந்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது: ஒன்று தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைத்து, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லலாம். அல்லது, ஆதரவு தரும் கட்சிகளிடமிருந்து கடிதங்களைப் பெற்றுத் தருமாறு விஜய்க்கு உத்தரவிடலாம்.
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சில எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கலாம் எனத் தெரிகிறது. இதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய கொங்கு மண்டல எம்எல்ஏவும் ஆன ஒரு நபர் மூலம் அதிமுகவிலிருந்து பெரும்பான்மையான எம்எல்ஏக்களை தவெகவுக்கு ஆதரவு அளிப்பதற்காக செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்.எல். ஏக்களில், ஆட்சியில் பொறுப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்காக அதிமுக எம்.எல்.க்களை தங்கள் பக்கம் இழுக்க செங்கோட்டையன் வியூகம் வகுத்து வருவதாகவும் இதனால், பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கும் சிக்கல் வரலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக எதிர்ப்பு அரசியலை மட்டுமே முன்வைத்து விஜய், காய் நகர்த்தி வென்றுள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை தவெக எம்.எல்.ஏக்களும் தொண்டர்கள் ஏற்பார்கள் என நம்பப்படுகிறது. மேலும் செங்கோட்டையனின் இந்த வியூகம் பழனிச்சாமிக்கு கொடுக்கும் பலத்த அடியாக இருப்பதோடு, அதிமுகவை மேலும் வலுவிழக்கச் செய்து தவெக நிரந்தர தனிப் பெரும்பான்மையான கட்சியாக உருவெடுப்பதற்கான நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. எது எப்படி ஆனாலும் தமிழக அரசியல் களம் புதிய திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்பதே உண்மை.
