சபரிமலையில் 2.29 லட்சம் பக்தர்கள் குறைவு….

Estimated read time 1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு மண்டல காலத்தின் முதல் 6 நாட்களில் பக்தர்களின் வருகை கடந்த ஆண்டை விட 46.7 சதவீதம் சரிந்துள்ளது. வழக்கமாக மண்டல பூஜை தொடங்கியது முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஆண்டு இதே முதல் 6 நாட்களில் 5,01,045 பக்தர்கள் ஐயப்பனைத் தரிசனம் செய்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு வெறும் 2,71,827 பேர் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர்; அதாவது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சுமார் 2.29 லட்சம் பக்தர்கள் குறைவாக வந்துள்ளனர்.

ஆன்லைன் மூலம் விர்ச்சுவல் கியூ (Virtual Queue) முன்பதிவு செய்த பல பக்தர்கள் கோயிலுக்கு வராததே இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்பதிவு இடங்கள் நிரம்பியதாகக் காட்டப்பட்டாலும், நேரில் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் தரிசன வரிசைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பக்தர்கள் வருகை குறைந்துள்ளதால் கோயிலின் வருமானத்திலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உண்டியல் காணிக்கை மற்றும் அப்பம், அரவணை உள்ளிட்ட பிரசாத விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் கோடிக்கணக்கில் சரிந்துள்ளது.

இந்த எதிர்பாராத சரிவு மற்றும் வருவாய் இழப்பு குறித்துத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். முன்பதிவு செய்து வராதவர்களின் இடங்களை உடனுக்குடன் மற்ற பக்தர்களுக்கு ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author