தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வெவ்வேறு இடங்களில் 3 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 143 நிவாரண முகாம்களில் 12,553 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் இல்லை. மொபைல் நெட்வொர்க்குகள் செயலிழந்துள்ளன.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் சுமார் 500 பயணிகள் சிக்கிக்கொண்டனர். இங்கு தண்ணீர் புகுந்து ரயில் பாதைக்கு அடியில் இருந்த மண் அடித்து செல்லப்பட்டுள்ளது. பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. மீட்புப் பணிகளுக்காக பல்வேறு படையினர் களம் இறங்கி உள்ளனர்.