மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி விழா சிறப்பு யாக பூஜைகளுடன் விமரிசையாக நடைபெற்றது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் ருத்ரப்பநகரில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகர், ஸ்ரீ விசாலாட்சியம்மன் உடனமர் ஸ்ரீ பஞ்சமுகலிங்கேஸ்வரர், ஸ்ரீ ரேணுகாதேவி, ஸ்ரீ குழந்தை வேலாயுத சுப்ரமணியர் திருக்கோவிலில் இன்று காலை 9:00 மணியளவில் சிறப்பு குருப்பெயர்ச்சி விழா வழிபாடுகள் தொடங்கின.

விழாவையொட்டி, உலக நன்மைக்காக மகா யாக வேள்விகள், தனுசு, மகரம் உள்ளிட்ட ராசிகளுக்கான பரிகார அர்ச்சனைகள், ஸ்ரீ குருபகவானுக்குத் திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் கண் கொள்ளாக் காட்சியாக அரங்கேறின. குரு பகவானின் அருளாசியைப் பெற வேண்டி, உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
