பக்தர் போல் வந்த அமைச்சர் ரமேஷ்…திருச்செந்தூரில் முறைகேடுகளை அம்பலப்படுத்திய அதிரடி ஆய்வு!

Estimated read time 0 min read

திருச்செந்தூர் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்காக கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து ஆய்வு மேற்கொள்ளாமல், இந்த முறை சாதாரண பக்தரைப் போல கோயிலுக்கு வந்த அமைச்சர், பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கோயிலில் நடைபெறும் நடைமுறைகளை நேரடியாக கண்காணித்தார். அப்போது சிலர் முறைகேடான வழியில் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அமைச்சரிடமே ரூ.4,000 பணம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களிடம் அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார். ஆய்வின் போது பல்வேறு முறைகேடுகள் தெரியவந்ததாக கூறப்படும் நிலையில், தொடர்புடையவர்களிடம் விளக்கமும் மன்னிப்பு கடிதமும் பெறுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர், சுத்தம், தரிசன ஏற்பாடுகள் மற்றும் அன்னதான உணவின் தரம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களிடமும் நேரடியாக கருத்து கேட்டு உணவின் தரம் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்ற இந்த திடீர் ஆய்வு, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவும், பக்தர்களுக்கு வெளிப்படையான சேவையை உறுதி செய்யவும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Please follow and like us:

You May Also Like

More From Author