சீனாவின் மாஸ்டர் பிளான்..! இனி செயற்கை சூரியன் விரைவில் ரெடி..?

Estimated read time 1 min read

அணுக்கரு இணைவு மூலம் தூய்மையான மற்றும் கிட்டத்தட்ட வரம்பற்ற ஆற்றலை உருவாக்கும் தனது லட்சிய ‘செயற்கை சூரியன்’ திட்டத்தில் சீனா ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. சீன அறிவியல் அகாடமியின் பிளாஸ்மா இயற்பியல் நிறுவனம், இந்தத் திட்டத்திற்காக உலகின் மிகப்பெரிய மீக்கடத்தும் அணுக்கரு இணைவு காந்தத்தை வெற்றிகரமாக உருவாக்கிச் சோதித்துள்ளது. டி வடிவிலான இந்த பிரம்மாண்ட காந்தம் 21 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும், 582 மெட்ரிக் டன் எடையும் கொண்டது. பிரான்சில் உள்ள சர்வதேச ITER திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட காந்தங்களை விட 1.3 மடங்கு பெரிதாகவும், 3 மடங்கு அதிக ஆற்றலைச் சேமிக்கக்கூடியதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்ட எஃகு, இன்சுலேடிங் பொருட்கள் மற்றும் கம்பிகள் என அனைத்தும் முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உலைக்குள் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வரை கொதித்தெழும் பிளாஸ்மாவை, உலை சுவர்களில் மோதவிடாமல் காந்த விசை மூலம் காற்றில் மிதக்க வைப்பதுதான் இந்த பிரம்மாண்ட காந்தத்தின் முக்கிய பணியாகும். நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற பாரம்பரிய எரிபொருட்கள் இன்னும் சில தசாப்தங்களில் தீர்ந்துவிடக் கூடும் என்பதால், அதற்கு மாற்றாக தூய்மையான ஆற்றலைத் தேடும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். நமது சூரியனின் இயக்கத்தைப் பின்பற்றும் இந்த அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்திற்குத் தேவையான மூலப்பொருட்கள் கடல் நீரிலிருந்தே எளிதாகப் பெறப்படுகின்றன. குறிப்பாக, ஒரு லிட்டர் கடல்நீரில் இருக்கும் டியூட்டீரியம் மூலம், 300 லிட்டர் பெட்ரோலுக்கு இணையான ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்பது வியக்கத்தக்க உண்மையாகும்.

இந்த அணுக்கரு இணைவு செயல்முறையானது எந்தவிதமான கதிரியக்கக் கழிவுகளையும் உருவாக்குவது இல்லை; அணுக்கருப் பிளவை விட இது மிகவும் பாதுகாப்பானதுமாகும். தற்போது உலகில் அதிக அளவில் கார்பன் உமிழ்வை ஏற்படுத்தும் நாடாக விளங்கும் சீனா, வரும் 2060 ஆம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வற்ற நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களை வெளியிடாத இந்த செயற்கை சூரியன் திட்டம், புவி வெப்பமயமாதலைத் தடுத்து பூமியைக் காப்பாற்ற உதவும் மிக முக்கியமான ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.

எதிர்கால உலகை முழுமையாக ஆளப்போவது எரிசக்தி துறையே என்பதால், இந்தத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் வணிக ரீதியாகக் கொண்டுவரும் நாடு உலகின் ஒட்டுமொத்த ஆற்றல் சந்தையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே சீனா தன் முழு பலத்தையும் இந்தப் ‘செயற்கை சூரியன்’ திட்டத்தில் முதலீடு செய்துள்ளது. உண்மைத் தன்மையிலிருந்து துளியும் மாறாமல், அறிவியல் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு சீனா எடுத்துவரும் இந்த அடியானது ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

You May Also Like

More From Author