ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஆக.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி இ.டி. பிரசாத் கோயில் நடையைத் திறக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆவணி மாதத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 17-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
அன்றைய தினம் உஷப்பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து 5 நாள்கள் பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் நடை திறந்திருக்கும். ஆவணி மாத பூஜைகள் நிறைவடைந்ததும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
அதன்பின்னர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்காக ஆகஸ்ட் 24-ஆம் தேதி மீண்டும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள், சபரிமலை கோயில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து, ஒதுக்கப்படும் நேரத்தில் தரிசனம் செய்யுமாறு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆவணி மாத பூஜைகள் மற்றும் ஓணம் பூஜையையொட்டி சபரிமலைக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 16 முதல் 28-ஆம் தேதி வரை திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரா, எருமேலி, புனலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
