ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்காக, நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு வணிகத்தை வழிநடத்தும் பொறுப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி சிரந்தன் ‘சிஜே’ தேசாயிடம் ஒப்படைத்துள்ளது. இவர் ஏற்கெனவே பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். தற்போது மெட்டா தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு நேரடியாக அறிக்கை அளிக்க உள்ளார்.
மெட்டா அண்மையில் ‘மெட்டா எண்டர்பிரைஸ் பிளாட்ஃபார்ம்’ என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனங்களும் மென்பொருள் உருவாக்குநர்களும் மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், ஏஐ முகவர்கள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு இந்தத் தளம் உதவும். நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இது முக்கியமானதாக இருக்கும் என்று ஜுக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய வணிகத்தை வழிநடத்தும் பொறுப்பு சிஜே தேசாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தனது ஆரம்பகால வாழ்க்கையைக் கழித்த சிஜே தேசாய், 1993-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றார். 1995-ஆம் ஆண்டு இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டமும் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். அதே ஆண்டில் ஆரக்கிள் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். பின்னர் சிமான்டெக், ஈஎம்சி, சர்வீஸ்நவ், கிளவுட்ஃப்ளேர், மாங்கோடிபி உள்ளிட்ட நிறுவனங்களில் பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்தார். சர்வீஸ்நவ் நிறுவனத்தில் தலைவராகவும் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றிய அவர், சுமார் ஓராண்டுக்கு முன்புதான் மாங்கோடிபி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
மெட்டாவின் புதிய பொறுப்பில் சிஜே தேசாய் நியமிக்கப்பட்டிருப்பது, நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு சேவைகளை விரிவுபடுத்தும் அதன் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் ஏற்கெனவே சிறு வணிகங்களுக்காக வாட்ஸ்அப்பில் வணிக ஏஐ வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, பொருட்கள் குறித்த தகவல்களை வழங்குவது, சந்திப்புகளைப் பதிவு செய்வது போன்ற பணிகளுக்கு இந்த வசதி உதவுகிறது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகங்கள் மெட்டாவின் வணிக ஏஐ முகவரைப் பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் சிஜே தேசாயின் அனுபவம் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
